Thursday, October 25, 2018

கொடிவேரி அணை



கொடிவேரி அணை. சோழ கொங்காள்வான் ஆள் (கி.பி 1125) ஆம் ஆண்டு கட்டப்பட்டது.../ கொடிவேரியின் பழைய பெயர் குழவாற்றூர்.
முதல் குலோத்துங்கனின் 55-வது ஆட்சி ஆண்டில் (கி.பி 1125) சோழ கொங்காள்வான் கொடிவேரியில் பவானி ஆற்றுநீர் பாயும் இடத்தை அகலப்படுத்தி நீரை பெரும் கற்களை கொண்டு தேக்கி கால்வாய் வெட்டினான்..இன்று இது கொடிவேரி அணை என்று அழைக்கப்படுகிறது..இந்த செய்தி கொடிவேரி,பவானி ஆற்றங்கரையில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.../
கொடிவேரி அணை சத்தியமங்கலத்திலிருந்து 15,கி.மீ தொலைவில் உள்ளது.கொடிவேரி அணையின் வடக்குப் பக்கம் ஒரு கால்வாயும்,தெற்கு பக்கம் ஒரு கால்வாயும் ஊராளி செம்ப வேட்டுவர் வெட்டினார்.கொடிவேரி அணையின் வடக்குப் பகுதில் உள்ள கால்வாய் அத்தாணி வரை செல்கிறது.ஏறக்குறைய 10 கி.மீ வரை செல்கிறது.இந்தக் கால்வாய் அரக்கன்கோட்டை கால்வாய் என்று அழைக்கப்படுகிறது..கொடிவேரி அணையின் தெற்கு பக்கத்தில் உள்ள மற்றொரு கால்வாய் கவுந்தப்பாடி,மேட்டுப்பாளையம் வரை செல்கிறது.இது ஏறக்குறை 15 கி.மீ தொலைவு செல்கிறது.இந்தக் கால்வாய் தடப்பள்ளி கால்வாய் என்று அழைக்கப்படுகிறது,,இந்த இரண்டு கால்வாய்கள் மூலம் பல ஆயரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது..இதிலிருந்து கி.பி.11 ஆம் நூற்றண்டிலே கொங்குநாட்டில் நீர்பாசன வசதியை பெருக்கியவர்கள் வேட்டுவ ஆட்சியாளர்களே என உறுதியாக தெரிகிறது.../


கொடிவேரி என்பதன் உண்மைப் பெயர் "கொடிவேலி".
நமது இந்தப் பகுதி.... அந்தியூர், கோபி, சத்தி, புளியம்பட்டி, அன்னூர், பவானிசாகர் ( பவானி ஆற்றின் உண்மைப் பெயர் "வாணி" ஆறு ) ஆகிய இப் பகுதிகள் விஜயநகர பேரரசின் கீழ் சிற்றரசாக இருந்த மைசூர் சமஸ்தானத்தின் கீழ் ஆட்சி செய்யப்பட்ட பகுதி இவை அனைத்தும்.
இந்த நம் பகுதியை கவனித்து வந்த குறுநில மன்னனின் பெயர் நஞ்சராயர். காளிங்கராயரின் வழி வந்தவர். இந்த பகுதியில் முற்காலத்தில் அதிகம் வாழ்ந்தவர்கள் லிங்காயத்து சமூகத்தார்.
1490ல் கட்டப்பட்டது தான் இந்த கொடிவேலி அணை. லிங்கயத்தார் தான் மைசூர் மன்னன் கிருஷ்ண ராஜவுடையாரிடம், இந்த பகுதி ஆற்றை ஒட்டியுள்ள செழிப்பான அடர்ந்த காட்டுப் பகுதி இங்கு விவசாயம் செய்து இப் பகுதியை செழிப்பாக்கலாம் என லிங்காயத்து சமூகத்தார் கேட்டுக் கொண்டதற்க்கு இணங்க இங்கு மைசூர் மன்னன் கிருஷ்ண ராஜவுடையாரால் கொடிவேலி அணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
(1286ல் கட்டப்பட்டது வாணி ஆற்றில் காளிங்கராயரின் அணை.)
மூன்று முறை முழுமையாக கட்டப்பட்டும் பெரு மழை வெள்ளத்தால் மூன்று முறையும் இடிந்து மாபெரும் சேதமானது கொடிவேலி அணை. திறப்புவிழாவிற்கு மைசூர் மன்னர் வருகை புரிவது ஏதோ அபசகுனமென அறிந்த மன்னன், மீண்டும் நாலாவது முறையாக அணையை கட்டி மன்னன் வராமலே திறக்கப்பட்டது இந்த கொடிவேலி அணை.
கொடிவேலி அணைப் பகுதியில் தற்பொது ஒரு கருப்பராயன் கோவில் உள்ளது. உண்மையில் அது சிவன் கோவில். 500 ஆண்டுகள் பழமையானது. லிங்காயத்து சமூகத்தார் அமைத்த சிவன் கோவில். தற்போது அது கருப்பராயன் கோவிலாக இருக்கிறது.
கிட்டத்தட்ட 600 வருடங்களுக்கும் அதிகமாக பழமையானது பண்ணாரி அம்மன் திருக்கோவில்.

கொடிவேரி அணையின் சிறப்பே அதன் கால்வாய்கள் மற்றும் மணல் வாரிகள்தான். நுட்பமான நீரியல் தொழில்நுட்பம் கொண்டவை அவை.

ஆற்றிற்கு இணையாக வெட்டப்பட்ட கால்வாய்கள்

அணையின் வலதுப் பக்கத்தில் தடப்பள்ளி வாய்க்காலும், இடதுப் பக்கத்தில் அரசன்கோட்டை வாய்க்காலும் சுமார் 5 கி.மீ நீளத்துக்கு ஆற்றை ஒட்டியே வெட்டப்பட்டன. பிற்காலங்களில் பாசனம் பெருகப் பெருக தடப்பள்ளி வாய்க்கால் 26 கி.மீ வரையும் அரசன்கோட்டை வாய்க்கால் 42 கி.மீ வரையும் வெட்டப்பட்டன.
உலக ஆறுகள் பாதுகாப்பு விதிமுறைகளின்படி (Helsinki Rules),
  • ஓர் ஆற்றில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்கக் கூடாது.
  • குறிப் பிட்ட அளவு ஆற்றின் நீர் கடலில் கலக்க வேண்டும்.
  • ஆற்றின் நீரியல்போக்கு திசையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேலாக எந்தக் காரணம் கொண்டும் திருப்பக்கூடாது என்கிறது.
ஆனால், அன்றைக்கே தமிழ் முன்னோர்கள் இதனை கொடிவேரி அணைக்கட்டுப் பாசனத்தில் நடை முறைப்படுத்தியிருக்கிறார்கள்.
தடப்பள்ளி கால்வாயும் அரசன் கோட்டை கால்வாயும் ஆற்றை ஒட்டியே இருபுறமும் செல்கிறது. இதனால் ஆற்றின் நீரோட்டம் திசை திருப்பப்படுவதில்லை. மேலும், ஆற்றில் இருந்து கால்வாய்களுக்குச் செல்லும் தண்ணீர் வயல்களுக்குச் சென்று; அதன் கசிவு நீர் மீண்டும் வாய்க்கால் வழியாக ஆற்றுக்கு வந்துவிடும்.
அதாவது ஒரு பாசன நிலம் தனக்குத் தேவையானதுபோக மீதமிருக்கும் தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கு அனுப்பிவிடுகிறது. இதற்காகப் பாசன நிலங்களின் மட்டத்துக்கு ஏற்ப கால்வாய்கள் அமைக் கப்பட்டன.
மிகச் சிறந்த சிக்கன நீர் மேலாண்மை இது. இங்கிருந்து ஆற்றுக்கு கீழே 60 கி.மீ தொலைவில் இருக்கிறது காலிங்கராயன் அணைக்கட்டு.
தடப்பள்ளி - அரசன்கோட்டை கால்வாய்களின் மிகச் சிறந்த நீர் மேலாண்மை காரணமாக இன்றைக்கும் கொடிவேரி அணையில் பாசனத்துக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்தால், அந்தத் தண்ணீர் இடைப்பட்ட பகுதிகளின் பாசனத்துக்கு போக மீதம் சுமார் 400 கனஅடி தண்ணீர் காலிங்கராயன் அணைக்குச் சென்று சேர்கிறது.

மணல்போக்கி தொழில்நுட்பம்

அணைக்கட்டின் மையப் பகுதியில் தண்ணீரின் குவி மையத்தில் கிணறு வடிவில் சுரங்கம் வெட்டப்பட்டிருக்கிறது. இது அணைக்கு வெளியே தண்ணீர் திறக்கப்படும் இடத்துக்கு சுமார் 20 அடி தூரத்துக்கு அப்பால் சென்று முடிகிறது. சுரங்கத்தின் வாய்ப் பகுதி அகலமாகவும் உள்ளேச் செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுரங்கத்துக்குள் கல்லால் ஆன நுட்பமான சல்லடை அமைப்புகள் மற்றும் கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.
மணல் போக்கிகளைக் கரையில் இருந்தே மூடும் வகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டன. இந்த மணல்போக்கிகள் மணலையும் சேற்றையும் உள்ளே இழுத்து மறுபக்க சுரங்கத்தின் துவாரம் அணைக்கு வெளியே தள்ளிவிடும். இதன் மூலம் அணையில் மணலும் சேறும் தங்கவில்லை. மேலும் இதன் வழியாக தண்ணீரும் வெளியேறாது என்பதும் இதன் தனி சிறப்பு. இதனால் அணையின் நீர் தூய்மையாக இருந்தது. அணை தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் தொழில்நுட்பம் இது.
இந்த அரிய தொழில்நுட்பங்களை இன்றைய மக்கள் அறியாமல் போனது தான் வேதனை. குடித்துவிட்டு குளிப்பவர்கள் அணைக்குள் இருக்கும் மணல்போக்கிகளுக்குள் சிக்கி இறந்துவிடுகிறார்கள் என்று அவற்றில் பாறைகளையும் மண்ணையும் போட்டு தூர்த்து வைத்திருக்கிறார்கள். இன்று கொடிவேரி அணைக்கட்டு சுற்றுலாத் தளமாக மட்டுமே அறியப்படுகிறது.

No comments:

Post a Comment