Friday, December 14, 2018

பெற்றோர்கள் கதவை சாத்திக்கொண்டு தனியாக அழும்நிலை!!!


எழுத்தாளர் திருமதி,அகிலா  அம்மையார் அவர்களின்
        சமூக நலப் பதிவுங்க.....

                                                                   இந்த தலைமுறை பெற்றோரிடம் நிறையொன்று இருக்கிறது. வயது கடக்க கடக்க, தன் பிள்ளைகளை நம்பி இருக்கக்கூடாதென்பதே அது. நல்ல விஷயம்தான். தனக்கான பொருளாதார நிறைவில் வாழ்தல், சார்ந்திரா மனம் உடையவராய் இருத்தல் எல்லாம் நல்லதே.
ஆனால் மாபெரும் குற்றமும் அதுதான் என்பதை புரியமுடிகிறதா? உங்களுக்கும் அவனுக்குமான அன்பு உரையாடல்கள் கூட ஒருநாள் முடிந்துப்போகக்கூடும். சார்ப்பில்லா வாழ்வில் அவனிடம் / அவளிடம் உங்களுக்கு என்ன வேண்டுமெனக் கேட்பீர்கள். 'கால் ரொம்ப வலிக்குதுடா', 'இன்னைக்கு அப்பா சாப்பிடலடா' என்ற சின்ன சின்ன யதார்த்த அழுகையை கூட பதிவு செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்படும் அபாயம் இருக்கிறது.
அதுவும் பிள்ளைகள் வெளியூரில் இருந்தால், இங்கு வாழும் பெற்றோர்கள் கதவை சாத்திக்கொண்டு தனியே அழுவதற்கு கற்றுவைத்திருப்பது பெரும் பரிதாபம். 'ஏன் அப்படி இருக்கனும்' என்ற கேள்விக்கு, 'எங்களுக்கு என்ன குறை? நாங்க ஏன் அவன்கிட்டே / அவக்கிட்டே போய் நிற்கனும்?' என்பது போன்ற ஈகோ நிறைந்த வினாக்களைப் பதிலாய் வைக்கிறார்கள்.
இந்த 'பணம்', 'பணம்' என்பதற்கு இடையில் பாசம், அன்பு, விட்டுக்கொடுக்கும் குணம் எல்லாம் எங்கே தொலைந்து போயிற்று? 'எனக்கு முடியலடா' என்றோ, 'கண்ணுலே கேட்ராக்ட் ஆப்ரேஷன் செய்ய சொல்லிட்டார் டாக்டர். என்னப்பா செய்ய?' என்று பிள்ளைகளிடம் பகிர கூட மனது ஏன் இடம் கொடுப்பதில்லை? உங்க பணத்தில் தான் வாழ்கிறீர்கள், வாழப்போகிறீர்கள். யாரும் மறுக்கவில்லை. அவர்களிடம் சொல்வதிலோ சந்தோஷத்தை அல்லது அழுகையை பகிர்வதிலோ நாம் எதில் குறைந்துவிட போகிறோம்.
காசும் பணமும் காரும் வீடும் மட்டும் வாழ்க்கையல்ல. நம் பிள்ளைகளை, நம் உரிமையாய் நம் நம்பிக்கையாய் காது கொடுக்கும் ஆதுரமாய் அணைத்து பழகுங்கள் பெற்றோர்களே.. அவர்களின் தினசரி கதையை நாமும் நம் அன்றாட கதையை அவர்களும் சொல்லி, கேட்டு, வாழுவோம்.. தன் அகந்தையை விட்டுக்கொடுத்து, தனிமையை அழித்து வாழ படிங்க..
~ எழுத்தாளர் திருமதி அகிலா..கோயம்புத்தூர்.
#Counselling
#மனநலம்

No comments:

Post a Comment